வாக்குறுதி திட்டம் தொடர்பாக சபாநாயகர் இருக்கை முன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
வாக்குறுதி திட்டம் தொடர்பாக சபாநாயகர் இருக்கை முன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
ADDED : மார் 12, 2025 05:52 AM

பெங்களூரு ; வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் குழுவின் தலைவர்களாக, காங்கிரசாரை நியமித்தது தொடர்பாக சபாநாயகர் காதர் இருக்கை முன், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் துருவகெரே ம.ஜ.த., உறுப்பினர் கிருஷ்ணப்பா நேற்று, அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் பற்றி பேசினார். அப்போது அரசின் வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றும் குழுக்களில் காங்கிரசாரை நியமித்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா பதில் அளிக்கையில், ''வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தும், மாவட்ட அளவிலான தலைவருக்கு 40,000 ரூபாயும்; துணை தலைவருக்கு 10,000 ரூபாயும்; உறுப்பினர்களுக்கு 1,100 ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படுகிறது,'' என்றார்.
இந்த பதிலால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணப்பா, ''கவுரவ நிதி சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது,'' என்றார்.
ஒத்திவைப்பு
அப்போது பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் பேசுகையில், ''மாநிலத்தில் பல்வேறு துறைகளில் 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடக பொதுப்பணி ஆணையத்தை மூடிவிடுங்கள்.
அங்கன்வாடி, ஆஷா ஊழியர்களுக்கு கவுரவ நிதி வழங்குங்கள். வாக்குறுதித் திட்டங்கள் பயனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் செல்லும்போது, எதற்கு குழு அமைத்து தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு கவுரவ நிதி கொடுக்கிறீர்கள்?'' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசும்போது, ''துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தலைவரான பின், காங்கிரசுக்கும், அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மாநில மக்களின் வரி பணத்தை, காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாரி இறைக்கின்றனர். காங்கிரசில் பணம் இல்லை என்றால், தெருக்களில் பிச்சை எடுக்கட்டும்,'' என்றார்.
அசோக்கின் கருத்துக்கு, ஆளுங்கட்சி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் போட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சியினரும் எழுந்து பேசியதால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. யார் என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. இதனால் சட்டசபையை 10 நிமிடங்களுக்கு, சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.
குடும்ப கண்கள்
அவை, மீண்டும் கூடியபோது, துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''எதிர்க்கட்சியினர் பட்ஜெட் பற்றி பேசட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். அதை விட்டுவிட்டு, எங்கள் கட்சியினர் பற்றி பேசாதீர்கள். அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், தொண்டர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களுக்கு சலுகை, பதவி வழங்க எங்களுக்கு உரிமை உண்டு. இதுபற்றி நான் சுயேச்சையாக முடிவு எடுக்கவில்லை. அமைச்சரவையில் விவாதித்துள்ளேன்,'' என்றார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் கூச்சல் போட்டனர். தொடர்ந்து சிவகுமார் பேசுகையில், ''வாக்குறுதித் திட்டங்களை ஆரம்பத்தில் இருந்தே, நீங்கள் எதிர்க்கிறீர்கள். ஆனாலும் நாங்கள் செயல்படுத்தினோம். எங்கள் திட்டங்களை பிரதமர் விமர்சித்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை, வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படாது. பெண்கள் குடும்பத்தின் கண்களாக மாற, நாங்கள் உதவி உள்ளோம்,'' என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் குறுக்கிட்டு, ''நாங்கள் வாக்குறுதித் திட்டங்களை எதிர்க்கவில்லை,'' என்றார்.
அசோக் பேசுகையில், ''டில்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. ஆனாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்குறுதித் திட்டத்திற்கான நிதியை திரட்டுவது கடினம் என்று, தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்,'' என்றார்.
அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், ''மஹாராஷ்டிராவில் அரசு பணிகள் தொடர்பான குழுக்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு யார் பணம் கொடுப்பது?'' என்றார்.
இதனால் அவையில் மீண்டும், கூச்சல் குழப்பம் நிலவியது. பின் தொடர்ந்து நடந்தது.