மருத்துவ காப்பீட்டாளருக்கு ஒப்புதல் 1 மணி நேரத்தில் வழங்க உத்தரவு
மருத்துவ காப்பீட்டாளருக்கு ஒப்புதல் 1 மணி நேரத்தில் வழங்க உத்தரவு
ADDED : மே 31, 2024 12:13 AM

புதுடில்லி: மருத்துவ காப்பீடு வைத்துள்ளவர்களுக்கு விரைவான சேவைகள் கிடைக்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்களுக்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவு களை பிறப்பித்துள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களை கண்காணிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அனைத்து மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கும், 'மாஸ்டர் சர்க்குலர்' எனப்படும் முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதன் வாயிலாக, மருத்துவ காப்பீடுகள் தொடர்பாக ஏற்கனவே உள்ள, 55 சுற்றறிக்கைகளுக்கு மாற்றாக இது இருக்கும்.
இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மருத்துவ காப்பீடு வைத்துள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, 'கேஷ்லெஸ்' எனப்படும் பணமில்லா மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு, காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கப்படும். விண்ணப்பித்த ஒரு மணி நேரத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதுபோல், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, மருத்துவமனைகள் தாக்கல் செய்யும் இறுதி பில்களுக்கு, மூன்று மணி நேரத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
'நோ கிளைம் போனஸ்'
ஒருவேளை காப்பீடு வைத்துள்ளவர், சிகிச்சையின்போது உயிரிழந்தால், இறுதி பில் பணமாகும்வரை, அவருடைய உடலை மருத்துவமனையில் வைத்திருக்கக் கூடாது; உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதற்கேற்ப, மருத்துவமனைகளுக்கு உரிய உத்தரவாதத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
காப்பீடு பெறுவோருக்கு, சிக்கலில்லாத, எளிமையான நடைமுறைகளை உருவாக்கித் தர வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காப்பீட்டாளரிடம் இருந்து எந்த ஆவணத்தையும், காப்பீட்டு நிறுவனங்கள் கேட்கக் கூடாது. அனைத்து தகவல்களையும் மருத்துவமனைகளிடம் இருந்தே பெற வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில், காப்பீட்டாளர், அதை பயன்படுத்தாத நிலையில், அவருக்கு, 'நோ கிளைம் போனஸ்' வழங்க வேண்டும்.
இது, அடுத்தாண்டு புதுப்பிக்கும்போது, கூடுதல் காப்பீட்டு தொகையாகவோ அல்லது புதுப்பித்தல் கட்டணத்தில் சலுகையாகவோ வழங்கலாம். அனைத்து நடவடிக்கைகளையும் வேகப்படுத்தும் வகையில், தொழில்நுட்ப வசதிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.
எவ்வளவு தொகை
காப்பீட்டு பாலிசி வழங்கும்போது பயனாளிக்கு, சி.ஐ.எஸ்., எனப்படும் நுகர்வோர் தகவல்களை இணைக்க வேண்டும்.
அதில், எந்த மாதிரியான காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது, எவ்வளவு தொகை, எந்தெந்த சிகிக்சைகளுக்கு பயன்படுத் தலாம், எவையெல்லாம் விடுபட்டுள்ளன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.
முடிந்தவரை மருத்துவ காப்பீட்டில், 100 சதவீதம் வரை, காப்பீட்டாளருக்கு கிடைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.