மூன்று வயது பெண் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவு
மூன்று வயது பெண் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவு
ADDED : ஆக 21, 2024 12:18 AM
புதுடில்லி, தாயின் சகோதரியின் பராமரிப்பில் உள்ள, 3 வயது பெண் குழந்தையை, அதன் தந்தையிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, 2021 ஏப்.,ல் கொரோனாவில் உயிரிழந்தார். அப்போது, பிறந்து 10 நாட்களான பெண் குழந்தை உட்பட தன் இரண்டு குழந்தைகளை அவர், தன் மனைவியின் சகோதரியிடம் ஒப்படைத்திருந்தார்.
தற்போது தன் தந்தையும் இறந்து விட்டதால், தனிமையில் இருப்பதாக கூறி, தன் குழந்தைகளை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், மனைவியின் சகோதரி அந்த குழந்தையை தர மறுத்து விட்டார்.
ஒரு வழியாக ஆண் குழந்தையைப் போராடி மீட்ட அவர், தற்போது, 3 வயதாகும் தன் பெண் குழந்தையையும் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வயது பெண் குழந்தையை, அதன் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.