ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவு
ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவு
ADDED : ஆக 31, 2024 12:03 AM

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜகதீஷ் டைட்லர் மீது கொலை, கலவரத்தை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக டில்லியில் தாக்குதல்கள் அரங்கேறின.
சீக்கியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அது தொடர்பான கலவரத்தை துாண்டிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் ஜகதீஷ் டைட்லருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே, கலவரத்தின் போது டில்லி புல் பங்காஷ் குருத்வாரா அருகே தாக்கூர் சிங், பாதல் சிங் மற்றும் குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக ஜகதீஷ் டைட்லர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு மே மாதம் டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜகதீஷ் டைட்லர் மீது வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர் மீது கலவரம் ஏற்படுத்துதல், கொலை உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்யலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.