ADDED : ஜூலை 04, 2024 01:26 AM
புதுடில்லி, ஊழல் புகார்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை, 'ஆன்லைன்' வாயிலாக அனுப்பும்படி அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில், ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்வுகாணும் வகையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் என்ற தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆன்லைன் வாயிலாக பிரத்யேகமாக உருவாக்கி உள்ள தளத்தில் ஊழல் புகார்கள் பெற வசதி ஏற்படுத்தி உள்ளது.
எனினும், இந்த புகார்களின் மீது விசாரணை அறிக்கைகள் அனுப்பும் நடைமுறை, தற்போது வரை நேரடியாக தாக்கல் செய்யும் வழிமுறையில் தான் உள்ளது. இதனால், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, கால விரயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, ஆன்லைன் வாயிலாகவே, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை அனுப்புமாறு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு அனுப்பப்படும் விசாரணை அறிக்கைகள், தலைமை விஜிலென்ஸ் அதிகாரியின் கையொப்பத்துடன், பி.டி.எப்., வடிவில் ஆன்லைனில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.