லாட்டரி மார்ட்டின் வழக்கில் விசாரணையை நிறுத்த உத்தரவு
லாட்டரி மார்ட்டின் வழக்கில் விசாரணையை நிறுத்த உத்தரவு
ADDED : ஏப் 11, 2024 01:32 AM
புதுடில்லி, லாட்டரி தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனையில் மோசடி செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்கும்படி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மார்ட்டின் மனு தாக்கல் செய்திருந்தார்.
அது தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜால் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மார்ட்டின் சார்பில் வாதிடப்பட்டதாவது:
லாட்டரி மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையிலேயே, இதில் பண மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கத் துவங்கியது.
முக்கிய வழக்கின் விசாரணை முடிந்தால் மட்டுமே, பண மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையை துவக்க முடியும். இது தொடர்பாக, 2022ல் நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதனால், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், பண மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

