ADDED : ஆக 19, 2024 10:47 PM

பெங்களூரு:
''மழைநீர் தேங்கும் இடங்களையும், தண்ணீர் சுமுகமாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்,'' என, மண்டல கமிஷனர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் உத்தரவிட்டார்.
பெங்களூரில் கடந்த வாரம் பெய்த ஒரு நாள் மழைக்கே, நகர மக்கள் தத்தளித்தனர். அந்த அளவுக்கு நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சுரங்கப்பாதைகள், மழைநீர் கால்வாய்களில் மழை வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், அனைத்து மண்டல கமிஷனர்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அவர் பேசியதாவது:
மழைநீர் தேங்கும் இடங்களையும், தண்ணீர் சுமுகமாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களையும் கண்டறிய வேண்டும். மழைநீர் சுலபமாக செல்லும் வகையில், அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
தண்ணீர் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் குப்பை, கழிவுகள் தேங்காமல் அகற்ற வேண்டும். பாதிப்பு பகுதிகளை, உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் மழை பெய்வதற்குள், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட கூடாது. நகரில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களை விரைந்து மூட வேண்டும்.
முதல் கட்டமாக, முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடுவதில் கவனம் செலுத்த வேண்டும். நகரில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்து வருகிறது.
தற்போது நாள் ஒன்றுக்கு 90 முதல் 95 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

