ADDED : ஏப் 13, 2024 05:43 AM
பெங்களூரு:ஆன்லைனில் கட்டணம் செலுத்தியும், காலணி வழங்காத நிறுவனம், வாடிக்கையாளருக்கு 3,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு கெங்கேரியை சேர்ந்தவர் ஸ்மிதா மோகன். இவர், 2023 மே மாதத்தில் உட்லாண்ட் நிறுவனத்திடம் ஆன்லைனில், 6,995 ரூபாய்க்கு காலணி வாங்க ஆர்டர் செய்திருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் காலணி டெலிவரியாகவில்லை. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தை பல முறை தொடர்பு கொண்டும் பலனில்லை.
இதனால் மனமுடைந்த ஸ்மிதா மோகன், 'புதிய காலணிக்கு தொகை செலுத்திய பின்னரும், காலணி வழங்காத நிறுவனம், தனக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும், அந்த நோட்டீசுக்கு எந்த பதிலும் வரவில்லை.
இதனால் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், வாடிக்கையாளர் ஸ்வேதா மோகனுக்கு, 3,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

