மாணவர்களிடம் சட்டவிரோத வசூல் ரூ.65 கோடியை திருப்பி தர உத்தரவு
மாணவர்களிடம் சட்டவிரோத வசூல் ரூ.65 கோடியை திருப்பி தர உத்தரவு
ADDED : ஜூலை 12, 2024 01:52 AM
ஜபல்பூர், மாணவர்களிடம் சட்டவிரோதமாக வசூலித்த, 65 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் திரும்ப வழங்கும்படி, 10 பள்ளிகளுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுஉள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
ஏழு முறை
இங்குள்ள ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணத்தை வசூலிப்பதாக புகார் வந்தது.
இதையடுத்து, மாவட்ட அளவில் குழு அமைத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அதிகாரிகள் கணக்கை ஆய்வு செய்தனர்.
அப்போது, 81,117 மாணவர்களிடம் சட்டவிரோதமாக கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு 2018 - 19 முதல் 2024 - 25 வரை, மொத்தம் ஏழு முறை 64.58 கோடி ரூபாய் வசூலித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கூடுதலாக வசூலித்த 65 கோடி ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்கக்கோரி 10 பள்ளி நிர்வாகங்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரி கன்ஷியாம் சோனி நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.
இது தொடர்பாக கலெக்டர் தீபக் சக்சேனா கூறியதாவது:
பள்ளி நிர்வாகங்கள் கல்வி கட்டணத்தை 10 சதவீதத்துக்கு அதிகமாக உயர்த்த வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடமும், 15 சதவீதத்துக்கும் மேல் உயர்த்த விரும்பினால் மாநில அரசு அமைத்துள்ள கல்வி குழுவிடமும் ஒப்புதல் பெற வேண்டும்.
ஒப்புதல்
ஆனால், சில பள்ளிகள் இவ்வாறு ஒப்புதல் பெறாமல் மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்துள்ளதால், அதை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.