ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்!
ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்!
UPDATED : டிச 23, 2024 02:54 PM
ADDED : டிச 23, 2024 12:05 PM

புதுடில்லி: 'கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் இளைஞர்களுக்கு எங்கள் அரசு அரசு வேலை வழங்கியுள்ளது, இது ஒரு சாதனை' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்துறை, அஞ்சல், உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில், பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 71 ஆயிரம் பேருக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக,இன்று (டிச.,23) பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் நேற்று இரவு குவைத்தில் இருந்து திரும்பி வந்துள்ளேன். அங்கு இந்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. இன்று நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியான தருணம். இது உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய துவக்கம். உங்கள் கடின உழைப்பு இறுதியாக வெற்றி அடைந்துள்ளது.
வளர்ச்சி
இன்று அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பெற்ற, இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். நமது இளைஞர்களின் திறமையை பயன்படுத்தி கொள்ள பா.ஜ., அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு நீண்ட காலமாக, உழைத்து வருகிறோம்.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உழைக்க வேண்டும். விண்வெளியில் இருந்து பாதுகாப்பு வரை மற்றும் சுற்றுலா முதல் சுகாதாரம் வரை, இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.