பெங்களூரில் காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க உரிமையாளர்களுக்கு உத்தரவு
பெங்களூரில் காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க உரிமையாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஆக 06, 2024 02:09 AM

பெங்களூரு : ''பெங்களூரு நகரில் காலி மனை வைத்திருப்போர், அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,'' என எட்டு மண்டல கமிஷனர்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
நோட்டீஸ்
பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து எட்டு மண்டல கமிஷனர், அதிகாரிகளுடன் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மண்டலங்களில் உள்ள காலி மனைகளை பட்டியலிட வேண்டும். பின், சம்பந்தப்பட்ட மனை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, காலி இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்' என குறிப்பிட வேண்டும்.
இத்துடன் இந்த காலி இடங்கள், சொத்து வரிக்கு உட்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர் குறித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விதிமுறையை மீறி பிளக்ஸ் பேனர்கள் பொருத்தப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுக்கள் ஒழிப்பு
'ஒயிட் டாப்பிங்' பணிகளை சம்பந்தப்பட்ட மண்டலங்களில் விரைவில் துவக்குங்கள். போலீசாருடன் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்க வேண்டும்.
தெருவோர மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மின் துறை ஊழியர்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பணியாற்ற வேண்டும்.
'சஹாய' உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தெரு விளக்குகள் இல்லாத இடங்களில் விரைந்து தெரு விளக்குகள் நிறுவுங்கள்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 160 முதல் 170 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, 600 கொசு ஒழிப்பான் கருவி மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நகரில் குப்பை, கொசு ஒழிப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து எட்டு மண்டல கமிஷனர்கள், அதிகாரிகளுடன் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார். இடம்: மாநகராட்சி தலைமை அலுவலகம், பெங்களூரு.