எதிர்பாராத இறப்புகளை தடுக்கும் படகரகேரி மஹா மிருதுஞ்சய சுவாமி
எதிர்பாராத இறப்புகளை தடுக்கும் படகரகேரி மஹா மிருதுஞ்சய சுவாமி
ADDED : ஆக 13, 2024 07:28 AM

குடகு மாவட்டம், விராஜ்பேட்டை தாலுகாவில் இருந்து, 45 கி.மீ., துாரத்தில் உள்ள படகரகேரி என்ற சிறிய கிராமத்தில், மஹா மிருதுஞ்சய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், குடகு மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. காபி தோட்டங்களால் சூழப்பட்ட விசாலமான பகுதியில், புனிதமும், தெய்வீகமும் நிறைந்த இடமாக உள்ளது.
ஓடுகள்
இயற்கையின் மடியில், மாசு படாத சூழலுக்கு இடையில், கம்பீரமான தோற்றத்தில் உள்ளதால், பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது. கோவில் வளாகத்திற்குள் நுழைந்த உடன், கொடி மரத்தை காணலாம். ஓடுகளால் கோவில் கட்டப்பட்டுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
கோவிலை சுற்றி, சிறிய பூந்தொட்டிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. பக்தர்கள் கோவிலை சுற்றி வர, விசாலமான இடம் உள்ளது. உள்ளே சென்ற பின், கருவூலத்தில் காட்சி தரும் மஹா மிருதுஞ்சய சுவாமியை தரிசனம் செய்யலாம்.
இந்த கோவிலில், நவக்கிரஹ பூஜை, ருத்ராபிஷேகம், சத்திய நாராயண பூஜை, வசந்த பூஜை, ஏகாதசி பூஜை என ஏராளான பூஜைகள் நடப்பது உண்டு. இங்கு வாகன பூஜை செய்தால், விபத்துகள் நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீங்க மஹா மிருதுஞ்சய ஹோமம், ஸ்ரீ மிருதுஞ்சய ஹோமம், கரு ஹோமம், பஞ்சாமரிஷா ஹோமம் செய்கின்றனர்.
'நினைத்தது நடக்கும்'
ஆண்டுதோறும் பிப்ரவரியில் ஆண்டு திருவிழா நடக்கும். குடகு மட்டுமின்றி, பெங்களூரு, மைசூரு, தமிழகம், ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
அசம்பாவித சம்பவங்கள், எதிரிகள் தாக்கி இறப்பதில் இருந்து, தங்களை காத்து கொள்வதற்காக இக்கோவிலுக்கு வருகின்றனர்.
இங்கு வந்து பக்தி பரவசத்துடன் வேண்டி கொண்டால், 'நினைத்தது நடக்கும்' என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
மஹா மிருதுஞ்சய கோவில் வளாகத்தில், விஷ்ணு சன்னிதியும் அமைந்துள்ளது. மஹா மிருதுஞ்சய ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர், காலை 11:30 மணிக்குள் வர வேண்டும்.
ரூ.80 கட்டணம்
ஹோமத்தில் பங்கேற்பதற்கு, ஒவ்வொரு பக்தருக்கும் தலா 80 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஹோமத்தில் பங்கேற்ற பின்னரே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமும் காலை 8:00 மணியில் இருந்து, பகல் 1:30 மணி வரை, சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் பிரசாதம், மதியம் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. காலை 9:00 மணிக்குள் சென்று விட்டால், மஹா மிருதுஞ்சய ஹோமத்தில் பங்கேற்று விட்டு, சுவாமி தரிசனம் செய்து கொண்டு, சுற்றுச்சூழல் அழகை ரசிக்கலாம்.
மதியம் அன்னதானம் முடித்து, அங்கிருந்து புறப்படலாம். விராஜ்பேட்டையில் இருந்து, பஸ் வசதி உள்ளது. ஆயினும், சொந்த வாகனத்தில் செல்வது சால சிறந்தது- நமது நிருபர் -.