ADDED : செப் 02, 2024 12:10 AM

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக் காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் படையப்பா ஆண் காட்டு யானை ஆட்டோக்களை சேதப்படுத்தியது.
அப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக முகாமிட்ட படையப்பா அவ்வப்போது தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நடமாடியது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய படையப்பா வீட்டின் அருகே நிறுத்தியிருந்த வினித்தின் ஆட்டோவை சேதப்படுத்தியது. அதன் பின் அப்பகுதியை விட்டு யானை சென்று விட்டதாக எண்ணி, அதே பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் சவாரி செல்ல ஆட்டோவை ' ஸ்டார்ட்' செய்த போது எதிர்பாராத வகையில் எதிரில் படையப்பா வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்பராஜ் உள்ளிட்டோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடி உயிர் தப்பினர். யானை ஆட்டோவை கவிழ்த்து விட்டு சென்றது. அப்பகுதியில் இருந்து யானையை வனத்துறையினர் விரட்டி விட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.