ADDED : செப் 12, 2024 12:48 AM

மும்பை, மும்பை ஏல நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த பிரபல ஓவியர் சையது ஹைதர் ரசாவின், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியம் திருடு போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து, பிரான்சுக்கு குடிபெயர்ந்து ஓவியக் கலையில் புகழ் பெற்றவர் சையது ஹைதர் ரசா. இவரது ஓவியங்கள் ஏராளமான சர்வதேச கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. கலைத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. 2016ல் தன் 94 வயதில் இவர் மறைந்தார்.
ரசாவின் ஓவியங்கள் விலைமதிப்பு மிக்கவை. இவரின் 'ஜெஸ்டேஷன்' என்ற ஓவியம், கடந்த ஆண்டு 51.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 'தபோவனம்' என்ற ஓவியம், 2018ல் நியூயார்க்கில் 28 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சவுராஷ்டிரா என்ற ஓவியம், 2010ல் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இந்நிலையில், இவரது 'பிரக்ருதி' என்ற தலைப்பிலான 1992ல் வரையப்பட்ட ஓவியத்தை, இந்திர வீர் என்பவர் வைத்திருந்தார். 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த ஓவியத்தை ஏலம் விடும்படி, மும்பையில் உள்ள ஆஸ்டா குரு நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஓவியம் திருடு போனது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, திருடனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.