பாக்., ஆதரவு கோஷத்தால் நெருக்கடியில் சிக்கியவருக்கு பதவி
பாக்., ஆதரவு கோஷத்தால் நெருக்கடியில் சிக்கியவருக்கு பதவி
ADDED : மார் 31, 2024 11:06 PM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில், ராஜ்யசபா தேர்தலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய ஆதரவாளர்களால் நெருக்கடிக்கு உள்ளான சையது நசிர் உசேனும் இடம் பிடித்து உள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, வாக்காளர்களை கவர, நட்சத்திர பேச்சாளர்களை பிரசாரத்துக்கு அரசியல் கட்சியினர் பயன்படுத்தி கொள்வர். இந்த வகையில், மாநில காங்கிரஸ் அரசு, நேற்று நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, எம்.பி., ராகுல், பிரியங்கா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, வேணுகோபால், வீரப்ப மொய்லி, சீனிவாஸ், லட்சுமண் சவதி, ஈஸ்வர் கன்ட்ரே, வினய் குமார் சொரகே, ஹரிபிரசாத், தேஷ்பாண்டே, பரமேஸ்வர், எம்.பி.பாட்டீல்.
தினேஷ் குண்டுராவ், கிருஷ்ணபைரே கவுடா, ரேவண்ணா, சிந்தியா, சோமசேகர், ஹனுமந்தையா, சந்திரசேகர், அபிஷேக், ஜமீர் அகமது கான், மது பங்காரப்பா, பரமேஸ்வர் நாயக், உக்ரப்பா, சாஹோத் ஜகப்பா, புஷ்பா அமர்நாத், உமாஸ்ரீ, சையது நாசிர் உசேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில், ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., சையது நாசிர் உசேன் இடம் பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரியில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசின் சையது நசிர் உசேன் வெற்றி பெற்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சிலர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை ஆளுங்கட்சி மறுத்தது.
போலீசார் விசாரணையில், கோஷம் எழுப்பியது உண்மை என்பதை உறுதி செய்தனர். கோஷம் போட்ட உசேனின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

