ADDED : மே 03, 2024 12:55 AM
ஆனந்த்,லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் இருந்த சவுத்ரி பாஹத் ஹுசைன், சமூக வலைதளத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தொடர்பான வீடியோ வெளியிட்டு, அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
குஜராத்தின் ஆனந்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது:
காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையில் உள்ளதற்கு பாகிஸ்தான் அழுகிறது. அந்த கட்சி வெற்றி பெறுவதற்கு பிரார்த்தனை செய்கிறது.
எதிரிகளின் விருப்பம்
காங்கிரஸ் இளவரசரை பிரதமர் பதவியில் அமர வைக்க அந்த நாடு விரும்புகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாகிஸ்தாானின் சீடர்கள்தான் காங்கிரஸ்.
இதன் வாயிலாக, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுஉள்ளது. நம் நாட்டில் வலுவில்லாத அரசு அமைய வேண்டும் என்பதே எதிரிகளின் விருப்பம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் உறவினர் மரியா அலாம், 'ஓட்டு ஜிகாத்' நடத்த வேண்டும் என்று பேசியுள்ளார். நன்கு படித்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.
மதப்பள்ளியில் படித்தவர் அல்ல. இதுவரை, லவ் ஜிகாத், நிலம் ஜிகாத் நடத்தியவர்கள், தற்போது ஓட்டு ஜிகாத் நடத்த அழைப்பு விடுகின்றனர்.
ஜிகாத் என்பதற்கான அர்த்தம் தெரிந்தும், இண்டியா கூட்டணியில் உள்ள யாரும் அதை கண்டிக்கவில்லை.
இடஒதுக்கீடு
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுகளை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.