பாக்., முன்னாள் அமைச்சருக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்
பாக்., முன்னாள் அமைச்சருக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்
ADDED : மே 26, 2024 12:30 AM
புதுடில்லி, லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பாக்., முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைனுக்கு கண்டனம் தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'உங்கள் நாட்டை முதலில் கவனியுங்கள்' என, பதிலடி கொடுத்தார்.
டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகள் உட்பட 58 தொகுதிகளில் நேற்று ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்தது.
சமூக வலைதளம்
டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தன் மனைவி உட்பட குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை, அவர் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன், 'அமைதியும், நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்' என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் கூறியதாவது:
எங்கள் நாட்டின் பிரச்னைகளை கையாளும் திறன், எனக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளது. உங்களின் கருத்து தேவையற்றது.
பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
தேர்தல்கள் இந்தியாவின் உள் விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை, எங்கள் நாடு பொறுத்துக் கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த சவுத்ரி பவாத் ஹுசைன், 'உண்மையில், தேர்தல் உங்கள் சொந்த பிரச்னை. பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தானது.
இதற்கு மனசாட்சி உள்ள அனைவரும் கவலைப்பட வேண்டும். பாகிஸ்தானின் நிலைமை லட்சியத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆனால் தனிநபர்கள் எங்கிருந்தாலும் ஒரு சிறந்த சமூகத்திற்காக பாடுபட வேண்டும்' என்றார்.
ஆதரவு
இந்த விவகாரம் தொடர்பாக டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “நம் எதிரி நாட்டுடன், அரவிந்த் கெஜ்ரிவால் கைகோர்த்து இருக்கிறார் என, நாங்கள் துவக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம்.
''ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் யாரும் தெரிவிக்கவில்லை. தற்போது டில்லியில் தேர்தல் நடக்கும் போது, பாகிஸ்தானில் இருந்து குரல் வருகிறது. கெஜ்ரிவாலுக்கு அந்நாட்டின் ஆதரவு உள்ளதையே இது காட்டுகிறது,” என்றார்.