'புக்கிங்' ரத்து செய்த பெண்ணுக்கு 'பளார்' அடாவடி ஆட்டோ டிரைவர் கைது
'புக்கிங்' ரத்து செய்த பெண்ணுக்கு 'பளார்' அடாவடி ஆட்டோ டிரைவர் கைது
ADDED : செப் 07, 2024 07:46 AM

பெங்களூரு: 'புக்கிங்' ரத்து செய்த பெண் கன்னத்தில் அறைந்ததுடன், தகாத வார்த்தைகளில் திட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணொருவர் கடந்த 3ம் தேதி, ராஜ்குமார் ரோட்டில் இருந்து, வேறு ஒரு இடத்துக்குச் செல்வதற்காக 'ஓலா' செயலி வாயிலாக ஆட்டோ 'புக்கிங்' செய்திருந்தார். இதற்கிடையே வேறொரு ஆட்டோவில் தன் தோழி வந்ததால், அதே ஆட்டோவில் புறப்பட்டார். தான் முன்பதிவு செய்திருந்த ஆட்டோவை 'கேன்சல்' செய்தார்.
ஆனால் அதற்குள், ஆட்டோ டிரைவர் முத்துராஜ், அந்த இடத்திற்கு வந்திருந்தார். புக்கிங்கை ரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். அது மட்டுமின்றி அந்த பெண் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து, வழிமறித்தார்.
'ஆட்டோ புக் செய்ததால், இங்கு வந்தேன். இப்போது வேறு ஆட்டோவில் சென்றால், நான் என்ன செய்வது? ஆட்டோ எரிவாயுக்கான பணத்தை, உன் அப்பன் கொடுப்பானா?' என திட்டினார்.
அந்த பெண்ணும், 'நான் அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், வேறு ஆட்டோவில் சென்றேன். புக்கிங்கை ரத்து செய்தேன்' என விளக்கம் கூறியும், முத்துராஜ் கேட்கவில்லை.
அந்த பெண்ணின் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு, அவரது கன்னத்தில் அறைந்து தாக்கினார்.
ஆட்டோ டிரைவரின் தவறான நடவடிக்கை குறித்து, ஓலா நிறுவனத்தில் அப்பெண் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடந்த சம்பவம், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இதை கவனித்த கூடுதல் டி.ஜி.பி., அலோக்குமார், ஆட்டோ ஓட்டுனரை கண்டித்தார்.
ஆட்டோ டிரைவரின் தவறால், அனைத்து டிரைவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாகடி ரோடு போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்று, டிரைவர் முத்துராஜை நேற்று கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.