பஞ்., ஊழியர் மீது தாக்குதல் டி.எஸ்.பி., மீது வழக்கு
பஞ்., ஊழியர் மீது தாக்குதல் டி.எஸ்.பி., மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2024 07:27 AM
துமகூரு: விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று, கிராம பஞ்சாயத்து வாட்டர் மேனை தாக்கியதாக, டி.எஸ்.பி., உட்பட நான்கு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துமகூரு, குனிகல் ஹோன்னமாச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர், 45. கிராம பஞ்சாயத்தில் 'வாட்டர் மேன்' வேலை செய்கிறார்.
கடந்த மார்ச் 21ம் தேதி, வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக போலீஸ் ஜீப்பில் வந்த குனிகல் டி.எஸ்.பி., ஓம் பிரகாஷ், அம்ருத்துார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாதவ நாயக், எஸ்.ஐ., சாவந்த் கவுடா, ஏட்டு தயானந்த் ஆகியோர், கங்காதரை வழிமறித்தனர்.
'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என்று, குனிகல் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் விசாரணை எதுவும் நடத்தாமல் கங்காதரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து குனிகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன்பின் தன் மீது தாக்குதல் நடத்திய டி.எஸ்.பி., உட்பட நான்கு போலீசார் மீதும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி, குனிகல் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் கங்காதர் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டி.எஸ்.பி., உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைடுத்து, நான்கு பேர் மீதும் குனிகல் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

