ADDED : ஆக 13, 2024 07:35 AM
பெங்களூரு: 'ஆக., 15, 17, 18ம் தேதிகளில் மலர் கண்காட்சியை காண மெட்ரோவில் செல்லும் பயணியர், லால்பாக்கில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பும் பயணியர் 30 ரூபாய் கட்டணம் செலுத்தி, காகித டிக்கெட் பெற வேண்டும்' என, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில், பெங்களூரு லால்பாக் பூங்காவில், 8ம் தேதி, 216வது மலர் மற்றும் பழங்கள் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை காண, நகரின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர்.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 60,726 பெரியவர்களும்; 7,422 குழந்தைகளும் வருகை தந்துள்ளனர். இதன் மூலம், 42.32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சுதந்திர தின மலர் கண்காட்சியை பார்க்க மெட்ரோ ரயிலில் செல்லும் பயணியர், டோக்கன், ஸ்மார்ட் கார்டுகள், 'கியூ ஆர்' கோடு மூலம் டிக்கெட் பெற்றுச் செல்லலாம். அதேபோன்று கண்காட்சியை பார்வையிட்ட பின், லால்பாக்கில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கு மெட்ரோ ரயிலில் செல்லும் பயணியர், ஸ்மார்ட் கார்டு, கியூ.ஆர் கோடு மூலம் மட்டுமே டிக்கெட் பெற முடியும்.
டோக்கன் வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, 30 ரூபாய் கட்டணம் செலுத்தி, காகித டிக்கெட் பெற வேண்டும்.
இச்சலுகை, வரும் 15, 17, 18ம் தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும். இச்சலுகையை பெற நினைப்போர், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, 'ரிட்டர்ன்' டிக்கெட்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காகித டிக்கெட் நடைமுறை தற்போது அமலில் இல்லை. நெரிசலை தவிர்க்கவும், பயணியர் வசதிக்காகவும் காகித டிக்கெட் வழங்கப்படுகிறது.

