ADDED : ஜூலை 06, 2024 02:28 AM
திலக் பிரிட்ஜ்,:“மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கில் ஒரு பங்கு மருத்துவமனைகளில் அறுவைச்சிகிச்சை அரங்குகள் முடங்கிக் கிடக்கின்றன,” என, மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசின் கட்டுப்பாட்டில் 28 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மொத்தம் 235 அறுவைச்சிகிச்சை அரங்குகள் உள்ளன. ஆனால் இவற்றில் 62 அரங்குகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
பல அரசு மருத்துவமனைகளில் அறுவைச்சிகிச்சை உதவியாளர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக அறுவைச்சிகிச்சை அரங்குகள் செயல்படவில்லை.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல அறுவை சிகிச்சைகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்படுகின்றன. இதனால் அறுவைச்சிகிச்சைக்காக நோயாளிகள் பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. நோயாளிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
லோக் நாயக் மருத்துவமனையில் 51 துணை மருத்துவ ஊழியர்கள், 170 செவிலியர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து, இங்குள்ள 13 அறுவைச்சிகிச்சை அரங்குகளில் ஆறு மூடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.