ADDED : ஜூன் 30, 2024 10:39 PM

தார்வாட்: 'காக்கா உட்கார, பன மரம் விழுந்த கதையாக, காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்துக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என மத்திய உணவு, பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் மாற்றம் சர்ச்சை ஏற்பட்டதில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது என்று மாநில அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளதில் எந்த அடிப்படை ஆதாரம் இருக்கிறது. இது காக்கா உட்கார, பனம் பழம் விழுந்த கதையாக, காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்துக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது காங்கிரசின் உட்கட்சி விவகாரம். இந்த பிரச்னைக்கு முதல்வர் சித்தராமையாவின் நேரடி பங்கு உள்ளது. முதல்வர், துணை முதல்வர் விவகாரத்தில் பா.ஜ., யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. அதே வேளையில், இவ்விஷயத்தில் சித்தராமையா மவுனம் காத்து வருகிறார். இதில் ரகசியம் உள்ளது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க, காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் உத்தரவிட வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த, மூத்த தலைவர்களால் முடியவில்லை. இவ்விவகாரத்தால், மாநில நிர்வாகம் முடங்கி உள்ளது. மக்கள் வழங்கிய அதிகாரத்தால், ஊழல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.