துணை மருத்துவ சட்டம் அமலாகவில்லை மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட் கெடு
துணை மருத்துவ சட்டம் அமலாகவில்லை மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட் கெடு
ADDED : ஆக 13, 2024 02:39 AM

புதுடில்லி, : துணை மருத்துவச் சேவைகள் தொடர்பான சட்டம், 2-021ல் இயற்றப்பட்டும், இதுவரை அமல்படுத்தாததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும், அக்., 12ம் தேதிக்குள் இதை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை மற்றும் உயிர் அறிவியல் மருத்துவ சேவை நிபுணர்கள், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்குவோருக்கென, 2-021ல் சட்டம் இயற்றப்பட்டது.
இதன் வாயிலாக, இந்தப் பிரிவு நிபுணர்களுக்கு கல்வித் தகுதி, மருத்துவ சேவை மையங்களை கண்காணித்தல், அது தொடர்பான பதிவுகளை பாதுகாப்பது போன்றவை கட்டாயமாக்கப்படுகிறது.
இது தொடர்பாக, மாநில அளவிலும், தேசிய அளவிலும், தனியாக கவுன்சில்கள் அமைக்க வேண்டும்.
தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய பல் மருத்துவ கவுன்சில் போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் வராத, துணை மருத்துவ நிபுணர்களுக்கானது இந்த சட்டம். கடந்த, 2021ல் இது நிறைவேற்றப்பட்டும் இதுவரை செயல்படுத்தப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்தாண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுவரை சட்டத்தை அமல்படுத்தாததுடன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாதற்கு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
வரும், அக்., 12க்குள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்யாவிட்டால், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், மாநில சுகாதாரத் துறைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.