எதிர்க்கட்சியினர் மீது லோக் ஆயுக்தா விசாரணை கவர்னர் விளக்கம் கேட்டதாக பரமேஸ்வர் தகவல்
எதிர்க்கட்சியினர் மீது லோக் ஆயுக்தா விசாரணை கவர்னர் விளக்கம் கேட்டதாக பரமேஸ்வர் தகவல்
ADDED : செப் 01, 2024 11:40 PM

பெங்களூரு: ''தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவினர் கவர்னரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு கவர்னர் சில விளக்கங்கள் கேட்டுள்ளார். அதற்கு உரிய விளக்கம் அளித்து, மீண்டும் கவர்னரிடம் அனுமதி கேட்பர்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மீது விசாரணை நடத்த கோரி, லோக் ஆயுக்தாவினர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அனுமதி கோரி உள்ளனர். அதற்கு கவர்னர் தரப்பில், சில விளக்கங்கள் கேட்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கங்களை நிவர்த்தி செய்த பின், மீண்டும் கவர்னரிடம் லோக் ஆயுயக்தாவினர் அனுமதி கேட்பர். அதன்பின், கவர்னர் முடிவெடுப்பார்.
நேற்று (முன்தினம்) தன்னிடம் ஒரு புகார் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த புகார் குமாரசாமி மீதானது என்று நினைக்கிறேன். இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது.
கார்கே மகனின் சித்தார்த்தா விஹார் அறக்கட்டளைக்கு கே.ஐ.ஏ.டி.பி., மனை ஒதுக்கியது தொடர்பாக, கவர்னருடன் விவாதிக்கவில்லை. சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக, முதல்வர் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை (இன்று) நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது பற்றி ஆலோசிக்கப்படும்.
'மூடா' தொடர்பாக முதல்வர் சித்தராமையா எந்த வருத்தமும் அடையவில்லை. அவர் தெளிவாக உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், முதல்வராக இருந்த போதும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதில்லை.
கொரோனா முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான கமிஷன், அறிக்கை சமர்ப்பித்த போது நான் இல்லை. அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கை அமைச்சரவை கூட்டத்திற்கு வந்தால், விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.