அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யாததால் மகன்களின் உடலை சுமந்த பெற்றோர்
அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யாததால் மகன்களின் உடலை சுமந்த பெற்றோர்
ADDED : செப் 06, 2024 01:00 AM

கட்சிரோலி, மஹாராஷ்டிராவில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மகன்கள் இறந்த நிலையில், அவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகம் வாகனம் ஏற்பாடு செய்யாததால், பெற்றோர், 15 கி.மீ., துாரத்துக்கு தோளிலேயே சுமந்து சென்றனர்.
மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம், பட்டிகாவுன் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, 10 வயதில் இரு மகன்கள் இருந்தனர்; இரட்டையர்கள். இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் குணமாகாததால் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் வாகனம் ஏற்பாடு செய்யவில்லை. தனியாக வாகனம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு இவர்களிடம் பண வசதியும் இல்லை.
இதனால், பெற்றோர் ஆளுக்கு ஒரு சடலத்தை தங்கள் தோளில் போட்டுக்கொண்டு சேறும், சகதியும் நிறைந்த வனப்பகுதி சாலை வழியாக 15 கி.மீ., நடந்தே தங்கள் கிராமத்துக்குச் சென்றனர். இதன் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் விஜய் வதேத்திவார், இந்த வீடியோவை சட்டசபையில் நேற்று காட்டி அரசை விமர்சித்தார்.
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்துள்ளனர். அவர்களின் உடலை எடுத்துச் செல்ல கூட ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யவில்லை.
“மழையால் சேதமடைந்த வனப் பகுதி சாலை வழியாக பெற்றோர் தங்கள் மகன்களின் உடலை 15 கி.மீ., துாரம் சுமந்து சென்றுள்ளனர். கட்சிரோலி மாவட்ட சுகாதார அமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது,” என்றார்.