மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
ADDED : ஆக 04, 2024 10:55 PM
சீனிவாசப்பூர்: அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வட்டார கல்வி அதிகாரியிடம் பெற்றோர் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டுஉள்ளது.
சீனிவாசப்பூர் மூத்தகப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இங்குள்ள ஆசிரியர் லட்சுமி நாராயண கவுடா என்பவர், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோருக்கு தெரிய வந்தது. இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அதிகாரி ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று முன்தினம் கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
'அவரும், அலட்சியமாக இருந்தால் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன் கிராமத்தினரை திரட்டி போராட்டம் நடத்துவோம்' என, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'இதே ஆசிரியர், நாராயணபுரா, இலதோனி கிராமங்களில் உள்ள பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர். எனவே, அவரை மாவட்டத்தை விட்டே வெளியேற்ற வேண்டும். பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளனர்.