விமானத்தில் குழந்தைகளுடன் 4 மணி நேரம் தவித்த பயணியர்
விமானத்தில் குழந்தைகளுடன் 4 மணி நேரம் தவித்த பயணியர்
UPDATED : செப் 16, 2024 12:35 AM
ADDED : செப் 15, 2024 11:48 PM

மும்பை: மும்பையில் இருந்து, கத்தாரின் தோஹாவிற்கு புறப்பட தயாரான இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், குழந்தைகளுடன் 300க்கும் மேற்பட்ட பயணியர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த விமானத்திற்குள் சிக்கி தவித்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவிற்கு இண்டிகோ நிறுவனத்தின், '6 இ - 1303' என்ற விமானம், 300க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று அதிகாலை 3:55 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அதை சரிசெய்யும் பணியில் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமானதால், விமானத்தில் இருந்த பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தங்களை கீழே இறங்க அனுமதிக்கும்படி விமான பணியாளர்களுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், குடியேற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்ததால், விமான நிலையத்திற்குள் மீண்டும் அனுமதிக்க முடியாது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது. இதனால், குழந்தைகளுடன் 300க்கும் மேற்பட்ட பயணியர் விமானத்திற்குள்ளேயே சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முடியாததால், அந்த விமான பயணத்தை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. அதன்பின், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, தோஹாவிற்கு பயணியர் அனுப்பி வைக்கப்படுவர் என விமான நிறுவனம் அறிவித்தது.
அதுவரை, அங்குள்ள ஹோட்டல் அறையில் பயணியர் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு உரிய உணவு வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. ஆனால், குடிநீர், உணவு போன்ற எதையும் விமான நிறுவனம் தரப்பில் வழங்கவில்லை என, பாதிக்கப்பட்ட பயணியர் குற்றஞ்சாட்டினர்.