கழிப்பறை வசதியில்லாமல் விமானத்தில் தவித்த பயணியர்
கழிப்பறை வசதியில்லாமல் விமானத்தில் தவித்த பயணியர்
ADDED : மார் 11, 2025 04:10 AM

புதுடில்லி : அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து, டில்லிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்த கழிப்பறைகள் அடைத்துக்கொண்டதால், 10 மணி நேரத்துக்கும் மேலாக வானில் பறந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் சிகாகோவில் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டில்லிக்கு சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அடுத்த 10 மணிநேரத்துக்கும் மேலாக வானில் பறந்த நிலையில், மறுநாள் காலையில், சிகாகோ விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாலேயே விமானம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 5ம் தேதி சிகாகோவில் இருந்து டில்லிக்கு விமானம் புறப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணியர் நிலை கருதி விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, அட்லாண்டிக் பெருங்கடல் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தது. பெரும்பாலான நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் இரவு நேரங்களில் தரையிறங்குவதில் கட்டுப்பாடு இருந்ததால், உடனடியாக விமானத்தை தரையிறக்க முடியவில்லை.
இதனால் மீண்டும் சிகாகோ விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. வானில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பறந்த விமானம், மறுநாள் 6ம் தேதி சிகாகோவில் தரையிறங்கியது.
விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கழிப்பறைகளில் இருந்து செல்லும் குழாய்களில் கந்தல் துணிகள், பாலீதீன் பைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.