ஏர்போர்ட்டில் புகுந்த மழைநீர் பெங்களூரில் பயணியர் அவதி
ஏர்போர்ட்டில் புகுந்த மழைநீர் பெங்களூரில் பயணியர் அவதி
ADDED : மே 11, 2024 12:58 AM

பெங்களூரு, பெங்களூரு விமான நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால், பயணியர் அவதிப்பட்டனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், 17 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை பலத்த மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
நகரில், 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களின் நேரம் மாற்றப்பட்டது.
வெவ்வேறு நகரங்களில் இருந்து பெங்களூரு வர வேண்டிய 17 விமானங்கள் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவை சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில், விமான நிலையத்தில் கார்கள் நிறுத்தும் இடம் முழுதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.
விமான நிலைய இரண்டாவது முனையத்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டியது. பயணியர் சரக்குகள் எடுக்கும் இடத்திலும் மழைநீர் தேங்கியது.
இதுகுறித்து, பயணியர் சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.