பவித்ரா கவுடா தோழிக்கு 'சம்மன்' விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
பவித்ரா கவுடா தோழிக்கு 'சம்மன்' விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ADDED : ஜூலை 06, 2024 06:20 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி உள்ள பவித்ரா கவுடாவின் நெருங்கிய தோழி சமதா என்பவருக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், கடந்த மாதம் 8ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணைக்கு பின், 17 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரூ.40 லட்சம் கடன்
இந்நிலையில், ரேணுகாசாமியை கொலை செய்த பின், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மோகன்ராஜ் என்பவரிடமிருந்து 40 லட்சம் ரூபாயை தர்ஷன் கடனாக வாங்கியது தெரிந்தது.
இது குறித்து, மோகன் ராஜிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராக அவருக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின், அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இயக்குனர்
ரேணுகாசாமியை கொலை செய்த மறுநாள், டெவில் படப்பிடிப்பில் தர்ஷன் கலந்து கொண்டார். இதனால், அந்தப் படத்தின் இயக்குனர் மிலானா பிரகாஷ் என்பவருக்கும் விசாரணைக்கு ஆஜராக, போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். பசவேஸ்வரா நகரில் வசித்து வரும் மிலானா பிரகாஷ், நேற்று காலை பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அவரிடம், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் சந்தன் விசாரணை நடத்தினார். பின், அவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எம்.எல்.ஏ., ஆபீஸ்
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பவித்ராவை, அவரது நெருங்கிய தோழி சமதா என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தார். அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு இருந்தன. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக சமதாவுக்கும், போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ரேணுகாசாமி கொலையில் கைதாகி உள்ள பிரதோஷ் என்பவர், கொலை நடந்த சிறிது நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து காரில் வெளியேறினார். ஆனால், அவரை அங்கு வந்து காரில் அழைத்து சென்றது யார் என்பது தெரியாமல் இருந்தது.
அந்த நபர் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரின் பெயர் கார்த்திக் புரோகித். பெங்களூரு பசவனகுடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவி சுப்பிரமணியா அலுவலகத்தில், கார்த்திக் புரோகித் வேலை செய்ததும், பிரதோஷின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக கார்த்திக் புரோகித்துக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தற்போது தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தர்ஷன், பவித்ரா, நந்திஸ், பிரதோஷ், கேசவமூர்த்தி, நிகில் நாயக், கார்த்திக் ஆகிய ஏழு பேரும், வேறு ஒருவரின் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.