ADDED : மே 02, 2024 01:13 AM

விசாகப்பட்டினம் ஆந்திர சட்டசபை தேர்தலில், 'பிக் பாஸ்' புகழ் திருநங்கை தமன்னா சிம்மஹாத்ரி, 39, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணை எதிர்த்து களமிறங்குகிறார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த மாநிலத்தில், வரும் 13ம் தேதி லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
சட்டசபை தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வாயிலாக புகழ்பெற்ற திருநங்கை தமன்னா சிம்மஹாத்ரி களமிறங்குகிறார்.
பாரத் சைதன்ய யுவஜனா கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், ஆந்திர தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர்.
கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷை எதிர்த்து மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை பிதாபுரத்தில் பவன் கல்யாணை தோற்கடிக்கும் நோக்குடன் களமிறங்கி உள்ளதாக தமன்னா சிம்மஹாத்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்க மாட்டேன். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறேன். மக்கள், என்னை ஆதரித்து வருகின்றனர்.
பிதாபுரம் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், இத்தொகுதியை தேசிய அளவில் ஆன்மிக தலமாக மாற்றுவேன். பிராமணர்களின் குழந்தைகளுக்கு வேத பாடசாலை அமைத்து, இலவசக் கல்வி கிடைக்க வழி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

