ADDED : ஜூன் 27, 2024 06:51 AM

சில நேரங்களில், ஒவ்வொருவருக்கும் தனிமை வேண்டும் என, தோன்றும். இயற்கையின் மடியில் தவழ விரும்புவர். இவர்களுக்காகவே, 'பர்ல் வேலி' காத்திருக்கிறது. இந்த சுற்றுலா தலம், பெங்களூருக்கு அருகிலேயே உள்ளது.
இன்றைய கால கட்டத்தில், அனைவரும் பரபரப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். இயந்திரத்தனமான வாழ்க்கையில், தங்களை தொலைக்கின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் உழைத்தால் மட்டுமே, குடும்ப வண்டி நகரும் என்ற சூழ்நிலை உள்ளது. வேலை, குடும்பம் என, உழல்கின்றனர்.
நெருக்கடியில் வாழ்ந்து வெறுப்படையும் போது, தனிமை வேண்டும் என தோன்றும். இயற்கையின் மடியில் தவழ்ந்து, பறவைகளின் ரீங்காரத்தை கேட்டு, மன அழுத்தத்தை நிவர்த்தி செய்து கொள்ள விரும்புவர்.
இவர்களை வரவேற்க 'பர்ல் வேலி' காத்திருக்கிறது. இதை முத்தியாலமடுவு என, அழைப்பர். இது சுற்றுலா பயணியரின் பேவரிட் இடமாகும். குறிப்பாக புதுமண தம்பதி, காதலர்களுக்காகவே உருவாக்கி வைத்தது போன்ற இடமாகும்.
புதிதாக திருமணம் செய்து கொண்ட பலரின் வீடுகள் மிகவும் சிறிதாக இருக்கும். வீடு நிறைய ஆட்கள் இருப்பர். தனிமையில் பேசி, அன்பை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்காது.
இத்தகைய தம்பதியர், 'பர்ல் வேலி'யை நாடுகின்றனர். இயற்கையை ரசித்தபடி, தனிமையில் பொழுது போக்க இங்கு வருகின்றனர்.
அற்புதமான அனுபவம்
பெங்களூரில் இருந்து, கூப்பிடு துாரத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு, தகவல் தெரியாததால் இந்த சுற்றுலா தலங்களை பார்த்ததே இல்லை. இதில், முத்தியாலமடுவும் ஒன்றாகும். பெங்களூரில் இருந்து, வெறும் 40 கி.மீ., துாரத்தில், ஆனேக்கல்லில் முத்தியாலமடுவு அமைந்துள்ளது. முத்துக்களை சிதற விட்டதை போன்று நீர்த்துளிகளை சிதற விட்டபடி உயரமான இடத்தில் இருந்து கீழே பாய்ந்து வரும், நீர் வீழ்ச்சியை பார்ப்பதே, அற்புதமான அனுபவம்.
நீர் வீழ்ச்சியை காண கீழே இறங்க, படிகள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியாக இறங்கும் போது, நீர் வீழ்ச்சியின் ஆக்ரோஷமான சப்தம் சுற்றுலா பயணியரின் இதயத்தை நடுங்க வைக்கும்.
நுாற்றுக்கணக்கான படிகளில் இறங்கி, கீழே நின்று மேலே பார்த்தால், சூரிய கதிர்கள் நீரில் பட்டு தங்க நிறத்தில் முத்துகளை போன்று ஜொலிக்கும்.
முத்தியாலமடுவுவின் இயற்கை அழகில் மயங்காதோர் இருக்க முடியாது.
பாறைகள் மீதும், மரத்தடியிலும் அமர்ந்து தனிமையில், இனிமை காணலாம். நீர்வீழ்ச்சி முன்பாகவே சிவன் கோவில் உள்ளது.
இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில் என்பதால், தினமும் பூஜை நடக்கிறது.
நீர் வீழ்ச்சியில் குளித்து, சிவனை தரிசித்து அருள் பெறலாம்.
முத்தியாலமடுவு ஏரியில், படகு சவாரி வசதியும் உள்ளது. படகில் ஏரியை ஒரு சுற்று சுற்றி வந்தால், மனமும், உடலும் உல்லாசமாக இருக்கும்.
ரெஸ்டாரென்ட் வசதி
முத்தியாலமடுவு சுற்றுலா தலம், கர்நாடக சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், கே.எஸ்.டி.சி.டி.சி., ரெஸ்டாரென்ட் வசதி உள்ளது.
பெங்களூரின், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பன்னரகட்டா வழியாக, ஆனேக்கல் பஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலமாக, முத்தியாலமடுவுக்கு செல்லலாம். ஓசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, சந்தாபுரா - ஆனேக்கல் மூலமாகவும், இந்த சுற்றுலா தலத்துக்கு செல்லலாம்.
- நமது நிருபர் -