ADDED : ஜூலை 24, 2024 11:42 PM

தங்கவயல் : கே.யு.டி.ஏ., தலைவராக பங்கார்பேட்டையின் கோபால் ரெட்டியை கர்நாடக அரசு நியமித்துள்ளது. தங்கவயலின் எண்ணம் ஈடேறவில்லை.
தங்கவயல், பங்கார்பேட்டை ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டது, கே.யு.டி.ஏ., எனும், 'கே.ஜி.எப்., அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி'. இது தங்கவயல் நகர வளர்ச்சி குழுமம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் தலைவர் பதவியை பெற, தங்கவயல், பங்கார்பேட்டை தொகுதிகளை சேர்ந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
தங்கவயல், பங்கார்பேட்டை தொகுதிகள் தனி தொகுதியாகும். எனவே, எஸ்.சி., அல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்தது. இந்நிலையில், தங்கவயல் நகர வளர்ச்சி குழும தலைவராக, பங்கார்பேட்டையின் கோபால் ரெட்டியை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா. இவரின் தந்தை முனியப்பா, உணவுத் துறை அமைச்சர். இருவரும், 'பவர்புல்'லாக இருந்தும், கே.யு.டி.ஏ., தலைவர் பதவியை, தங்கவயலுக்கு பெறுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.
'தங்கவயலில், தொழிற் பூங்கா மண்டலம் அமைய உள்ள வேளையில், பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சாலைகள் ஏற்பட, தங்கவயல் நகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி, மிக மிக அவசியம்.
'இந்நிலையில், தங்கவயல் நகர அபிவிருத்தி குழுமத் தலைவர் பதவி, தங்கவயலுக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்' என்று பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.