நடைபாதை வாகன ஓட்டிகளுக்கு ஆக., 1 முதல் 'கிடுக்கிபிடி'
நடைபாதை வாகன ஓட்டிகளுக்கு ஆக., 1 முதல் 'கிடுக்கிபிடி'
ADDED : ஜூலை 23, 2024 11:34 PM

பெங்களூரு : சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், ஆகஸ்ட் 1 முதல் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்றுமாறு, சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சமீப காலமாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகமாக நடக்கின்றன. போக்குவரத்து போலீசார் எவ்வளவு முயற்சித்தாலும், விதிகளை மீறுவது நின்றபாடில்லை.
இதனால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் விதிகளை கடுமையாக பின்பற்றும்படி, போக்குவரத்து போலீசாருக்கு சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகள் பயன்படுத்தும் வாகனங்களை கண்காணிக்கும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பெங்களூரு, மங்களூரு, ஹுப்பள்ளி - தார்வாட், மைசூரு, சாம்ராஜ்நகர், உத்தர கன்னடா, ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா ஆகிய மாவட்டங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டன.
இதேபோன்று, ஆகஸ்ட் 1ம் தேதி முதல், நடைபாதை மீது ஓட்டும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு வழிப்பாதையில் எதிரே வருவது குறித்து வாகன சோதனை நடத்தப்பட வேண்டும்.
மேலும், வாகன எண்கள் சரியாக தெரியாத வகையில் இருக்கும் வாகனங்களையும் கண்காணிக்க வேண்டும். அத்தகைய வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

