மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 நிமிடம் நின்றால் அபராதம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 நிமிடம் நின்றால் அபராதம்
ADDED : மே 12, 2024 07:13 AM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில், 20 நிமிடங்களுக்கு மேல் பயணியர் யாராவது நின்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,' என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதேவேளையில், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், அநாவசியமாக சிலர் சுற்றித்திரிகின்றனர். நீண்ட நேரம் அங்கேயே இருந்து மொபைல் போனை பார்த்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், விஜயநகர் மெட்ரோ ரயில் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இரவு 9:55 மணிக்கு பயணி ஒருவர், தனது மொபைல் போனை சார்ஜரில் வைத்திருந்தார். அங்கு வந்த மெட்ரோ ரயில் ஊழியர், இன்னும் 5 நிமிடங்களுக்கு மேல் இங்கிருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.
அதற்கு அந்த பயணி, 'எனது மொபைல் போனில் சார்ஜ் இல்லை. ஐந்து நிமிடங்கள் இருக்கிறேன்' என்றார்.
அதற்கு ஊழியர், 'அதெல்லாம் முடியாது. பயணி ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிற்க கூடாது. மீறி நின்றால், அபராதம் வசூலிக்கப்படும்' என கூறினார்.
இதையடுத்து அந்த பயணி, அப்போது வந்த மெட்ரோ ரயிலில் ஏறி சென்றுவிட்டார். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் நடவடிக்கையை பலரும் கண்டித்தனர்.
இது தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், 'இந்த விதிமுறை புதிதாக ஒன்றும் அமலுக்கு கொண்டு வரவில்லை. மெட்ரோ ரயில் சேவை துவங்கியதில் இருந்தே இந்த விதிமுறை உள்ளது.
மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் சிலர், டோக்கன் பெற்றுக் கொண்டு, நீண்ட நேரம் அங்கேயே இருக்கின்றனர். இதை தவிர்க்கவே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது' என்றனர்.