நிலுவை திட்டங்கள் வேகமெடுக்கும் ஆதிஷி பொறுப்பேற்பதால் எதிர்பார்ப்பு
நிலுவை திட்டங்கள் வேகமெடுக்கும் ஆதிஷி பொறுப்பேற்பதால் எதிர்பார்ப்பு
ADDED : செப் 17, 2024 08:11 PM
புதுடில்லி:மாநிலத்தின் புதிய முதல்வராக ஆதிஷி பொறுப்பேற்றவுடன், டில்லி அரசின் செயல்பாடு, நிலுவையில் உள்ள திட்டங்கள் வேகமெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் பிப்ரவரியில் டில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள் குறுக்கே நின்றன.
இதனால் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, நகர அரசாங்கத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்கும், முதன்மைத் திட்டங்களை விரைவு படுத்துவதற்கும் முதல்வர் மாற்றம் இன்றியமையாததாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதல்வராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்ததால், மாநில அரசின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. நிதி பற்றாக்குறை காரணமாக சாலைகள், நீர் வழங்கல், சாக்கடை, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகள், உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகளை கையாள முடியாமல் தவித்து வந்தது.
பெண்களுக்கான கவுரவ நிதி வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு முடங்கிக்கிடந்தது. புதிதாக முதல்வர் பதவியேற்கும் ஆதிஷி, இந்த பிரச்னைகளை சமாளித்து, வரும் தேர்தலிலும் ஆம் ஆத்மிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்கிடையில் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

