பெங்.,- - முருடேஸ்வரா ரயில் தாமதத்தால் பயணியர் பாதிப்பு
பெங்.,- - முருடேஸ்வரா ரயில் தாமதத்தால் பயணியர் பாதிப்பு
ADDED : ஜூன் 29, 2024 11:07 PM
பெங்களூரு: பெங்களூரு- - முருடேஸ்வரா எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் தாமதமாக செல்வதால், பயணியர் பெரும் சிரமப்படுகின்றனர்.
உத்தர கன்னடாவின் பட்கல் தாலுகாவில் உள்ளது முருடேஸ்வரா சிவன் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, கர்நாடகா மட்டுமின்றி, அண்டைய மாநில பக்தர்கள் தினமும் செல்கின்றனர்.
2 ரயில்கள்
பெங்களூரில் இருந்து முருடேஸ்வரா வழியாக கார்வாருக்கும், பெங்களூரில் இருந்து முருடேஸ்வராவுக்கும் தினமும் இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து, கார்வாருக்கு தினமும் மாலை 6:50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6:00 மணிக்கு முருடேஸ்வராவை சென்றடைகிறது.
பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் முனையத்தில் இருந்து தினமும் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம் 1:20 மணிக்கு முருடேஸ்வராவை சென்றடைகிறது.
முதலில் புறப்படும் ரயில், சரியான நேரத்திற்கு செல்கிறது.
ஆனால் இரண்டாவது புறப்படும் ரயில், கடந்த சில மாதங்களாக தாமதமாக செல்வதாக பயணியரிடம் இருந்து புகார்கள் வந்து உள்ளன.
தினமும் மாலை 5:00 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு 'வந்தே பாரத் ரயில்' புறப்படுகிறது.
இந்த ரயில், எந்த தடையும் இன்றி செல்வதற்காக, முருடேஸ்வரா செல்லும் ரயிலை, ராம்நகர் அல்லது சென்னப்பட்டணா ரயில் நிலையத்தில், அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால், மைசூரு செல்வதற்கு கூடுதல் நேரம் ஆகிறது.
வனப்பகுதி பாதை
முருடேஸ்வரா ரயில், ஹாசன் சக்லேஸ்பூரில் இருந்து தட்சிண கன்னடாவின் சுப்ரமணியா ரோடு இடையிலான ரயில் பாதை, வனப்பகுதிக்குள் செல்வதால், அந்த பாதையில் ரயில், மெதுவாகவே செல்லும்.
இதனால், சக்லேஸ்பூருக்கு தினமும் அதிகாலை 3:00 மணிக்கு செல்ல வேண்டிய ரயில், தற்போது 4:00 மணிக்கு தான் செல்கிறது. சுப்ரமணியா ரோடு, கபகா புத்துார், பன்ட்வால் பகுதிகளை சேர்ந்தவர்கள், முருடேஸ்வரா ரயிலில் மங்களூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.
நடவடிக்கை
தற்போது ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக வருவதால், ரயிலை நம்பாமல் பஸ்சில் செல்ல துவங்கி உள்ளனர்.
கேரளாவின் காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களுக்கு செல்வோரும், இந்த ரயிலில் சென்று மங்களூரில் இறங்கி, அங்கிருந்து இணைப்பு ரயில்களில் செல்கின்றனர்.
ஆனால் முருடேஸ்வரர் ரயில் தாமதமாக செல்வதால், கேரளா செல்வோருக்கு இணைப்பு ரயில்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணியர் கடும் அவதி அடைந்துள்ளனர். முருடேஸ்வரா ரயில் தாமதமாக செல்வதற்கு, வந்தே பாரத் ரயிலே காரணம் என பயணியர் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
ரயில் தாமதமின்றி செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணியர் கோரிக்கை வைத்துஉள்ளனர்.