பெங்., மாநகராட்சி பள்ளி, பி.யு., கல்லுாரிகள் கல்வி துறையிடம் விரைவில் ஒப்படைப்பு
பெங்., மாநகராட்சி பள்ளி, பி.யு., கல்லுாரிகள் கல்வி துறையிடம் விரைவில் ஒப்படைப்பு
ADDED : மே 02, 2024 06:45 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளை மாநில கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.
பெங்களூரு மாநகராட்சிக்கு 91 நர்சரி பள்ளிகள், 16 துவக்க பள்ளிகள்; 33 உயர்நிலைப்பள்ளிகள்; 19 பி.யு., கல்லுாரிகள்; நான்கு பட்டப்படிப்பு கல்லுாரிகள்; இரண்டு முதுகலை பட்டப்படிப்பு கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகள், கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன.
ஒப்படைப்பு
இவற்றைத் தவிர்க்கும் வகையில், 16 துவக்கப் பள்ளிகள்; 33 உயர்நிலைப்பள்ளிகள்; 19 பி.யு., கல்லுாரிகளை, மாநில கல்வித் துறையிடம் ஒப்படைப்பது குறித்து பல ஆண்டுகளாகவே பெங்களூரு மாநகராட்சியும், மாநில கல்வித் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தனர்.
தற்போது மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளை, கல்வித் துறையிடம் ஒப்படைத்து, நடப்பு 2024 - 25ம் ஆண்டு ஜூன் முதல் கல்வித் துறை தலைமையில் இயங்க மாநகராட்சி தலைமை நிர்வாகி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அரசின் அனுமதி கேட்டு, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதிகாரப்பூர்வமாக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
நிலுவையில் ஒப்பந்தம்
அதுபோன்று மாநகராட்சி பள்ளி, கல்லுாரி கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை கல்வித் துறை நியமிக்கும். ஆனால் பள்ளி, கல்லுாரிகளை சுத்தம் செய்வது, பாதுகாப்புக்கு நபர்களை நியமிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மாநகராட்சியே கவனித்துக் கொள்ளும்.
அதுமட்டுமின்றி, இந்த மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பள்ளி பேக், ஸ்வெட்டர், மதிய உணவுகளை மாநகராட்சியே வழங்கும்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., 2ம் ஆண்டில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு 'பிரதிபா புரஷ்கார்' மற்றும் ஊக்கத்தொகைக்கான தொகையையும் மாநகராட்சியே வழங்கும். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர் தினத்தை, மாநகராட்சியே நடத்தும்.
மாணவர்களிடம் பொறுப்பு
பள்ளி, கல்லுாரிகளின் நிரந்தர ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓய்வு பெறும் வரை தொடருவர். பின் கல்வித் துறை மூலம் ஆட்சேர்ப்பு பணி நடக்கும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
பள்ளியில் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு மாணவர்களிடம் ஒப்படைக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

