சொத்து வரி செலுத்தாதோருக்கு பெங்., மாநகராட்சி 'ஷாக்'
சொத்து வரி செலுத்தாதோருக்கு பெங்., மாநகராட்சி 'ஷாக்'
ADDED : ஆக 16, 2024 06:45 AM
பெங்களூரு: சொத்து வரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுப்பவர்களுக்கு, 'ஷாக்' கொடுக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
பெங்களூரில் வீடு, நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து, மாநகராட்சி ஆண்டுதோறும் சொத்து வரி வசூலித்து வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலோனார் வரி கட்டாமல், மாநகராட்சிக்கு டிமிக்கி கொடுக்கின்றனர்.
சொத்து வரி செலுத்தாதோரின், சொத்துகளுக்கு சீல் வைக்கும் அதிகாரம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் சொத்துகள் சீல் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால் சில நேரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் சட்ட சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்.
இதற்கு முடிவு கட்ட மாநகராட்சி முன்வந்து உள்ளது. பெங்களூரு நகரம் முழுதும் இந்த ஆண்டு, 3 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை என்பதை மாநகராட்சி கண்டறிந்து உள்ளது. வரி செலுத்தாதவர்கள் வங்கி கணக்கு விபரங்களை, மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
வரி செலுத்தாதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து வங்கிகளுடன், மாநகராட்சி பேச்சு நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.