பெங்., டெலிகாம் டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கட்டணம்
பெங்., டெலிகாம் டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கட்டணம்
ADDED : செப் 01, 2024 11:32 PM

பெங்களூரு: பெங்களூரில் உள்ள டெலிகாம் டவர்களுக்கு, ஆண்டுதோறும் 12,000 ரூபாய் கட்டணம் விதிக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் வருவாய்ப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2018 புள்ளி - விபரங்களின் படி, பெங்களூரில் 6,766 டெலிகாம் டவர்கள் உள்ளன. இதற்கு முன் ஒவ்வொரு நிறுவனமும், தனித்தனி டவர் பொருத்தி, டெலிகாம் சேவை வழங்கின. ஆனால் சமீப நாட்களாக ஒரே டவரில், மூன்று, நான்கு நிறுவனங்களின் சிக்னல்களை பொருத்தி உள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சி, 2008ல் டெலிகாம் டவர்களுக்கு, கட்டணம் விதிக்க முடிவு செய்தது. இது குறித்து கேள்வி எழுப்பி, டெலிகாம் நிறுவனங்கள், நீதிமன்றத்தை நாடின. நீதிமன்றம் விதிமுறைகள் வகுத்த பின், கட்டணம் விதிக்கும்படி உத்தரவிட்டது.
கர்நாடக அரசும் புதிய தொலை தொடர்பு விதிமுறைகள் வகுத்து, உத்தரவு பிறப்பித்தது. இந்த விதிமுறையின்படி, ஒவ்வொரு டவருக்கும், ஆண்டுக்கு 12,000 ரூபாய் கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
டெலிகாம் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பெங்களூரில் எங்கெங்கு டவர் பொருத்தப்பட்டுள்ளன, டவர் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பற்றியும் தகவல் கூறுவர். அதன்பின் கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
டெலிகாம் நிறுவனங்கள், டவர்கள் அமைத்துள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு, மாதந்தோறும் அல்லது ஆண்டு தோறும் வாடகை செலுத்துகின்றன. எனவே நிலத்தின் உரிமையாளர்களிடமும் கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.