மக்கள் நம் பக்கம் தான்; ஆனால்... நிர்வாகிகளுக்கு சோனியா எச்சரிக்கை!
மக்கள் நம் பக்கம் தான்; ஆனால்... நிர்வாகிகளுக்கு சோனியா எச்சரிக்கை!
ADDED : ஜூலை 31, 2024 11:28 PM
புதுடில்லி:''மக்கள் நம் பக்கம் தான் இருக்கின்றனர். ஆனால், மன நிறைவு மற்றும் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்து விட வேண்டாம். நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வை வீழ்த்தி, மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க வேண்டும்,'' என, காங்., - பார்லி., குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பார்லி., குழுத் தலைவர் சோனியா பேசினார்.
தலைநகர் டில்லியில், பழைய பார்லி.,யில் உள்ள மைய மண்டபத்தில், காங்., - பார்லி., குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பார்லி., குழுத் தலைவர் சோனியா பேசியதாவது:
வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரழிவு அதிர்ச்சி அளிக்கிறது. இயற்கை பேரிடரை தவிர, தவறான நிர்வாகத்தால் ஏற்படும் ரயில் விபத்துகளிலும் நம் மக்கள் உயிரிழக்கின்றனர்.
பொது மக்களின் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது. நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வை வீழ்த்தி, மக்களின் நம்பிக்கையை தக்கவைக்க வேண்டும்.
நாம் மன நிறைவு மற்றும் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்து விடக் கூடாது. லோக்சபா தேர்தலில் பணியாற்றியது போல் சிறப்பாக செயல்பட்டால், தேசிய அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், இளைஞர்களின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட்டைப் பற்றி சாதகமாக பேசினாலும், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதே நிதர்சனம்.
'கன்வர்' யாத்திரை வழித்தடங்களில், கடை வைத்திருப்பவர்கள், தங்கள் பெயர் அடங்கிய பலகையை வைக்க வேண்டும் என்ற உ.பி., - உத்தரகண்ட் அரசின் உத்தரவை, நல்லவேளையாக, உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தியது. எனினும் இது தற்காலிகமானது தான்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கலாம் என எப்படி விதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு கலாசார அமைப்பு என, கூறுகிறது.
ஆனால், அது பா.ஜ.,வின் அரசியல் மற்றும் சித்தாந்தத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அமைப்பு என்பதை உலகம் அறியும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
லோக்சபா தேர்தல் முடிவுகளிலிருந்து, மோடி அரசு பாடம் கற்கவில்லை. மக்களை அக்கட்சி தொடர்ந்து பிளவுபடுத்தி வருகிறது. என்.சி.இ.ஆர்.டி., - யு.ஜி.சி., - யு.பி.எஸ்.சி., போன்ற அனைத்து கல்வி அமைப்புகளையும் பா.ஜ., சீரழித்து விட்டது. போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி உலகையே சுற்றி வருகிறார். ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்ல அவர் மறுக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில், அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், செப்., 30க்குள் தேர்தல் நடக்க உள்ளது.