ADDED : ஆக 20, 2024 01:13 AM

அகோலா,
மஹாராஷ்டிராவில், பூண்டை போலவே அச்சு அசலாக, 'சிமென்ட்'டால் செய்யப்பட்ட பூண்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக, பூண்டு உள்ளது. குழம்பு, பொரியல் என அனைத்து பயன்பாட்டுக்கும் பூண்டு மிகவும் அத்தியாவசியமானது.
இதனால், பூண்டு விலை பல மடங்கு உயர்ந்தாலும் அதை வாங்குவதை மக்கள் நிறுத்தவில்லை. தக்காளி, வெங்காயத்தின் விலையை காட்டிலும், பூண்டு விலை எப்போதும் தங்கம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள பஜோரியா என்ற பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுபாஷ் பாட்டீல் மனைவி, தெருவோர வியாபாரியிடம் சமீபத்தில், 250 கிராம் பூண்டு வாங்கினார்.
சமையலுக்கு பயன்படுத்த பூண்டை உரித்த போது, அதை உரிக்க அவரால் முடியவில்லை. சற்று கூர்ந்து பார்த்த அவர், பூண்டை போலவே, சிமென்ட் கலவையால் செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
நாடு முழுதும் பூண்டு விலை உயர்ந்து வரும் நிலையில், சந்தையில், இது போன்று சிமென்ட் பூண்டு விற்பனை செய்யப்படுவது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மஹாராஷ்டிரா மாநில உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பூண்டு போல் சிமென்டில் தயாரிப்பதற்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். மேலும், அதை உரிக்கும்போது சிமென்ட் என எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
'எனவே, கலப்படத்துக்காக சிமென்ட் பூண்டு தயாரிப்பதற்கு வாய்ப்பு குறைவு. ஆனாலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

