ADDED : செப் 12, 2024 12:49 AM
புதுடில்லி, பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் டில்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் கரோருக்கு தென்மேற்கே 25 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த பகுதியில் 33 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.
இதனால் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான் உள்ளிட்ட இடங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. எனினும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் அதிர்வு டில்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் போன்ற வடமாநிலங்களிலும் உணரப்பட்டது.
அப்போது, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சீலிங் பேன்கள், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் திடீரென அசைந்தன. சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் தஞ்சம் அடைந்தனர்.
டில்லியில் கடந்த மாதம் 29ல், 5.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது முறையாக நிலஅதிர்வு உணரப்பட்டது.