ADDED : ஜூலை 07, 2024 01:35 AM
திருவனந்தபுரம்,கேரளாவில் டெங்கு, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் உட்பட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து, மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், டெங்கு காய்ச்சலும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், மேலும் பலவிதமான காய்ச்சல்கள் அங்கு வேகமாக பரவி வருகின்றன.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலம் முழுதும் கடந்த ஐந்து நாட்களில், 55,830 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், 493 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சலால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று முன்தினம் பலியாகினர்.
எலிக்கடி காய்ச்சலால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 'ப்ளூ' வகை காய்ச்சலான 'வெஸ்ட் நைல் காய்ச்சல்' ஆறு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல், 158 பேருக்கு கொரோனா தொற்றும், 64 பேருக்கு மஞ்சள் காமாலை இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க பன்றி காய்ச்சல், திருச்சூர் பண்ணையில் உள்ள சில பன்றிகளுக்கு பரவியதை அடுத்து, அங்கிருந்த அனைத்து பன்றிகளையும் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகளவு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில், புதுப்புது காய்ச்சல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, மாநிலம் முழுதும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
போதுமான டாக்டர்கள் இல்லாதது, மருந்து தட்டுப்பாடு காரணமாக அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மழைக்காலத்துக்கு முந்தைய சுகாதார நடவடிக்கைகளை மாநில அரசு திறம்பட கையாளாததே, பல வகையான காய்ச்சல்கள் பரவுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.