மக்களுக்கு துரோகம் கூடாது: புதுச்சேரி அரசுக்கு கண்டிப்பு
மக்களுக்கு துரோகம் கூடாது: புதுச்சேரி அரசுக்கு கண்டிப்பு
ADDED : செப் 15, 2024 06:48 AM

சென்னை: 'தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது; பின் வாசல் வழியாக, அரசு பணிகளில் நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது' என, புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த அய்யாசாமி தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் அரசு துறைகளில், தற்காலிகமாக ஊழியர்களை நியமித்து, பின் நிரந்தரம் செய்யப்படுவதாகவும், இவ்வாறு பின் வாசல் வழியாக நியமனங்கள் நடப்பதாகவும் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி, வெளிப்படையாக நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
'தகுதியானவர்களுக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பகம் அல்லது போட்டி தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு நடக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்; 2022 நவம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை புதுச்சேரி அரசு பின்பற்றவில்லை என, அவமதிப்பு வழக்கை அய்யாசாமி தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.ரவிச்சந்தர் ஆஜரானார். புதுச்சேரி அரசு தரப்பில் அரசு பிளீடர் ஆஜரானார். அவரிடம் நீதிபதி கூறியதாவது:
வேலை வாய்ப்புக்காக எத்தனை பேர் காத்திருக்கின்றனர். அரசு வேலை கிடைக்காதா என்று எதிர்பார்த்து, அதற்கு தயாராகி வருகின்றனர். நீங்கள் பின் வாசல் வழியாக நியமித்தால், அவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்?
தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. பின் வாசல் வழியாக நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது.
சில பணிகளில் தற்காலிகமாக நியமனம் செய்தாலும், அந்த பணிக்கு நிரந்தரமாக நியமிக்கும் போது, வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும். தேர்வில், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நபர்களையும் பங்கேற்க செய்யலாம்.
விதிகளை பின்பற்றி, அரசு பணிகளில் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். பின் வாசல் வழியாக, சட்டவிரோதமாக நியமனங்கள் நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.