கர்நாடக கவர்னரை கண்டித்து போராட்டம் காங்கிரசார் அடாவடியால் மக்கள் அவதி
கர்நாடக கவர்னரை கண்டித்து போராட்டம் காங்கிரசார் அடாவடியால் மக்கள் அவதி
ADDED : ஆக 20, 2024 02:10 AM

பெங்களூரு, 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதியளித்த கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.
மங்களூரில் தனியார் பஸ் மீது கற்கள் வீசி சேதப்படுத்தினர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால், பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வரின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது.
அனுமதி
இதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்த, கடந்த 17ம் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். கவர்னரின் இந்த செயலை கண்டித்து, கர்நாடகா முழுதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு சுதந்திர பூங்காவில், மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கவர்னருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, அமைச்சர்களே ஒருமையில் பேசினர். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாக பேசினர்.
கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற அக்கட்சி தொண்டர்களை, போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில் காலை முதலே போராட்டம் தீவிரமாக இருந்தது. கவர்னருக்கு எதிராக மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராகவும் காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.
நடுரோட்டிலேயே படுத்து உருண்டும், சட்டைகளை கழற்றி விட்டு அரை நிர்வாணமாகவும் போராட்டம் நடத்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
படம் எரிப்பு
முதல்வர் படத்துக்கு பால் அபிஷேகம் செய்தும், கவர்னர் படத்தை எரித்தும் கோபத்தை காண்பித்தனர். சாமுண்டி மலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கடைகளை அடைத்து விட்டு, கவர்னரை கண்டித்து அங்கேயே போராட்டம் நடத்தினர். இதனால், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்த பக்தர்கள், பூஜை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய தொண்டர்கள், நடுரோட்டில் டயர்களுக்கு தீ வைத்து கோஷம் எழுப்பினர். அந்த வழியாக வந்த தனியார் பஸ் மீது கற்கள் வீசினர். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுதும் உடைந்தது.
கருகிய தலைமுடி
ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், டயருக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த சஞ்சு என்ற மகளிர் ஏட்டு தலைமுடி தீயில் கருகியது. மாநிலம் முழுதும் காங்கிரசார் நடத்திய போராட்டத்தால் பொதுமக்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், இப்பிரச்னையில் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.