மக்கள் விரும்புகின்றனர்: தீவிர அரசியலுக்கு வருவேன்: ராபர்ட் வாத்ரா சொல்கிறார்
மக்கள் விரும்புகின்றனர்: தீவிர அரசியலுக்கு வருவேன்: ராபர்ட் வாத்ரா சொல்கிறார்
ADDED : மே 09, 2024 01:19 PM

புதுடில்லி: ‛‛ இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு தீவிர அரசியலுக்கு வருவேன்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்திக்கிறேன். அமேதி, ரேபரேலி, மொராதாபாத் என எங்கு சென்றாலும், நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அமேதி மற்றும் ரேபரேலி மக்களுடனான எனது உறவு வலிமையானது.
சோனியா குடும்பத்தில் நானும் ஒருவன். இதனால், உலகம் முழுவதும் பலர் என்னை சந்திக்க விரும்புகின்றனர். நான் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆகியோரை சந்தித்து உள்ளேன்.
சோனியா குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கும் போது, பெரிய சக்தியுடன் பொறுப்பும் வர வேண்டும். எந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். சாம் பிட்ரோடாவின் கருத்துகளை முற்றிலும் நான் நிராகரிக்கிறேன். நன்கு படித்த ஒருவர் இதனை எப்படி சொல்லலாம். அவர் ராஜிவுடன் நெருக்கமாக இருந்தவர். சிறிது பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். ராகுலும், பிரியங்காவும் கடும் முயற்சி செய்கின்றனர். ஆனால், அவரின் ஒரு கருத்தால், பா.ஜ., தேவையற்ற விவகாரத்தை எழுப்புவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
யாருக்கும் பதிலடி கொடுக்க அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை. நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அது ராஜ்யசபா மூலம் கூட இருக்கலாம். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வேன். அமேதி, ரேபரேலி, மொராாபாத் நகரங்களுக்கும் சென்று, மக்களின் ஆசி வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சில காலத்திற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.இவ்வாறு ராபர்ட் வாத்ரா கூறினார்.