'மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட கூடாது'
'மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட கூடாது'
ADDED : மார் 04, 2025 12:36 AM

புதுடில்லி : பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் மாவட்ட நீதித்துறையில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாவட்ட நீதித்துறையில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்டவரின் தாய் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய பிரதேசம் நீதி சேவை விதிகளின்படி, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மாவட்ட நீதித் துறையில் வேலை வாய்ப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது.
இதுபோல, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களிலும், வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவற்றை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இதை முக்கிய பிரச்னையாக கருதி விசாரித்தோம். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பின் தேவை ஆகியவற்றை கருத்தில் வைத்து ஆய்வு செய்தோம்.
மாற்றுத்திறனாளி என்பதால் யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. அவர்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது.
மாவட்ட நீதித்துறையில் பணியாற்ற, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் உரிய வாய்ப்பு தர வேண்டும். சம வாய்ப்பு வழங்க மறுக்கும் மத்திய பிரதேச நீதித்துறை விதிகள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதுபோலவே, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கு தொடர்ந்தோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, அமர்வு கூறியுள்ளது.