ADDED : செப் 03, 2024 10:33 PM
ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட, மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
ஹூப்பள்ளி டவுனில் ஈத்கா மைதானம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை, மைதானத்தில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று, ஹிந்து அமைப்பினர் கடந்த ஆண்டு, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஹிந்து அமைப்பினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹூப்பள்ளி ஈத்கா மைதானத்தில், விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்டனர்.
இதற்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று நாட்கள் சிலை வைத்து வழிபட அனுமதி கிடைத்து இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடுவது குறித்து, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி கமிஷனர் சசிகுமார் நேற்று தன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஹிந்து, முஸ்லிம் சமூக தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமிஷனர் சசிகுமார் பேசுகையில், ''இரவு 10:00 மணிக்கு மேல் பாடல்களை ஒலிபரப்ப தடை உள்ளது. நீங்கள் கத்தியுடன் அலைந்தால், நாங்கள் லத்தி, துப்பாக்கியுடன் சுற்றி வருவோம். பிரச்னை செய்தால், உங்களை எங்கு அமர வைக்க வேண்டுமோ, அங்கு அமரவைத்து விடுவோம்,'' என்றார்.