ADDED : மே 30, 2024 06:33 AM
ஹூப்பள்ளி: பெருச்சாளி தொல்லையால் வெறுப்படைந்த நபர், இதை கட்டுப்படுத்தும்படி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
சில வாரங்கள் இடைவெளியில், ஹேமா மற்றும் அஞ்சலி என்ற இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளால், தேசிய அளவில் ஹூப்பள்ளி கவனத்தை ஈர்த்தது. தற்போது பெருச்சாளி மீது, போலீசாரிடம் ஒருவர் புகார் அளித்து, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஹூப்பள்ளியின், ஆனந்த நகரில் வசிப்பவர் அனில் முன்டரகி. இவரது பக்கத்து வீட்டில், பெருச்சாளிகள் அதிகரித்துள்ளன.
நிம்மதியிழந்த அனில் முன்டரகி, பக்கத்து வீட்டினரிடம் பெருச்சாளிகளை கட்டுப்படுத்தும்படி மன்றாடியும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
பொறுமையிழந்த அனில் முன்டரகி, ஹூப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பக்கத்து வீட்டு பெருச்சாளிகளால், எங்களின் நிம்மதி போய்விட்டது. தினமும் எங்கள் வீட்டில் புகுந்துவிடுகின்றன. காஸ் இணைப்பு குழாயை கடித்துத் துண்டிப்பது, கழிவுநீர் வெளியேற்றும் குழாயை கடித்துத் துண்டித்தன.
ஆங்காங்கே நிலத்தை துளைத்து, மண்ணை வெளியே எடுப்பது என, பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகின்றன.
வீடு முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. 15 முதல் 20 பெருச்சாளிகள் இந்த செயலை செய்துள்ளன. பக்கத்து வீட்டினரிடம் பல முறை முறையிட்டும் பயன் இல்லை. பெருச்சாளி பிரச்னையை தீர்த்து வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்து அங்கடியை வரவழைத்து, பெருச்சாளிகளை ஒழிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அவரிடம் எழுதி வாங்கினர். பெருச்சாளியை ஒழிக்காவிட்டால், மீண்டும் போலீசாரிடம் புகார் அளிப்பதாக, அனில் முன்டரகி எச்சரித்துள்ளார்.
சித்து அங்கடி கூறுகையில், ''நாங்கள் அந்த வீட்டில் வசிக்கவில்லை. வேறு இடத்தில் வசிக்கிறோம். அந்த வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்ட வேண்டியுள்ளது. யாரும் வசிக்காததால், பெருச்சாளிகள் தொல்லை அதிகரித்துள்ளது. விரைவில் இதை கட்டுப்படுத்துகிறோம்,'' என்றார்.